உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவிற்கு உட்பட்ட ஹல்தோனி கிராமத்தில், ஆகஸ்ட் 28-ஆம் தேதி வீட்டிலிருந்து மாயமான 6 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமி காணாமல் போனது குறித்துக் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில், அதே பகுதியில் வசித்து வந்த பலராஜ் என்பவன் சிறுமியை ஆசைகாட்டி கடத்தி, பின்னர் ஒரு மூட்டையில் அடைத்து வயல்வெளியை நோக்கித் தூக்கிச் சென்ற அதிர்ச்சி காட்சிகள் பதிவாகியிருந்தன. ​சந்தேகநபரை உடனடியாகப் பிடித்து விசாரணை நடத்தியதில், சிறுமியைக் கொலை செய்து மூட்டையில் அடைத்து வீசியதை ஒப்புக்கொண்டான். அவனைக் கைது செய்த EcoTech-3 காவல் நிலையத்தின் தனிப்படை போலீசார், குற்றத்திற்குப் பயன்படுத்திய கத்தியை மீட்க ஆகஸ்ட் 29 அன்று அவனைப் புதர் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்த பலராஜ், எதிர்பாராதவிதமாக அங்கிருந்த .32 போர்ட் துப்பாக்கியைக் கொண்டு போலீசாரை நோக்கிச் சுட்டுத் தப்ப முயன்றான். இதில் ரவி குமார் என்ற தலைமைக் காவலர் காயமடைந்த நிலையில், போலீசார் தற்காப்பிற்காக நடத்திய அதிரடி என்கவுன்ட்டர் துப்பாக்கிச் சூட்டில் பலராஜ் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தான். ​இதனிடையே, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவளது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிறுமியின் சடலம் கைப்பற்றப்பட்டு, மருத்துவர்கள் குழுவால் வீடியோ பதிவோடு உடற்கூராய்வு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. போஸ்ட்மார்ட்டம் அறிக்கை மற்றும் தடயவியல் (FSL) சோதனைகளின் முடிவுகள் வந்த பிறகே மரணத்திற்கான முழுமையான காரணமும், பாலியல் அத்துமீறல்கள் நடந்ததா என்பதும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ள போலீசார், இச்சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.