ராஜஸ்தானின் ஜாலோர் மாவட்டத்தில் உள்ள காஜிப்பூர் கிராமத்தில், சவுத்ரி சமூகத்தைச் சேர்ந்த 15 கிராமங்களை உள்ளடக்கிய பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. இதில், வரும் ஜனவரி 26 முதல் பெண்கள் மற்றும் இளம் மருமகள்கள் கேமரா வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும், அதற்குப் பதிலாக சாதாரண கீபேட் (Keypad) போன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமணங்கள், பொது விழாக்கள் அல்லது அண்டை வீடுகளுக்குச் செல்லும்போது மொபைல் போன்களை எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ​இந்த விசித்திரமான முடிவுக்கு பஞ்சாயத்துத் தலைவர் சுஜ்னாராம் சவுத்ரி அளித்துள்ள விளக்கம் இன்னும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால், வீட்டில் உள்ள குழந்தைகள் எப்போதும் போனைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், இதனால் அவர்களின் கண் பார்வை பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வீட்டு வேலைகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்க, பெண்கள் போனை குழந்தைகளிடம் கொடுத்து அவர்களை திசைதிருப்புவதாகவும், அதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பஞ்சாயத்து தரப்பில் கூறப்பட்டுள்ளது. பள்ளிச் செல்லும் மாணவிகள் கல்வி தேவைக்காக மட்டும் வீட்டில் போன் பயன்படுத்தலாம், ஆனால் அதை வெளியே எடுத்து வரக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.