நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் பிரபல இயக்குநர்–தயாரிப்பாளர் ராஜ் நிடிமோரு காதலில் உள்ளதாக நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தைகள் நிலவி வந்த நிலையில், இருவரும் நேற்று கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் லிங்க பைரவி கோவிலில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணப் புகைப்படங்களை வெளியிட்டு செய்தியை உறுதிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

சமந்தா 1987 ஏப்ரல் 28 அன்று பிறந்தவர். தற்போது அவருக்கு 38 வயது.
ராஜ் நிடிமோரு 1979 ஆகஸ்ட் 4 பிறந்தவர்; அவருக்கு 46 வயது. இருவருக்கும் இடையே 8 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பேச்சு பொருளாக மாறியுள்ளது. லிங்க பைரவி கோவிலில் நடைபெற்ற இந்த திருமணம் பூதசுக்தி விவாஹ முறைப்படி நடந்தது. மாலை மாற்றும் சடங்கின் மூலம் இருவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்வில் சுமார் 30 நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமணத்தில் சமந்தா சிவப்பு ஜரிகை புடவை, பாரம்பரிய தங்க நகைகள் அணிந்து தென்னிந்திய மணப்பெண் தோற்றத்தில் திகழ்ந்தார். ராஜ் வெள்ளை குர்தா மற்றும் பழுப்பு நிற நேரு ஜாக்கெட் அணிந்து இருந்தார். சடங்கின் ஒரு பகுதியாக இருவரும் மோதிரங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

சமந்தாவும் ராஜும் முதல் முறையாக 2021ஆம் ஆண்டு வெளியான ‘தி ஃபேமிலி மேன் 2’ தொடரில் ஒன்றாக பணியாற்றினர். அதனைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டு வெளியான ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ தொடரிலும் இணைந்து நடித்தனர். அந்தத் தொடர் பெரும் வெற்றி பெற்றது. இருவரும் தற்போது ‘ரக்த பிரம்மாண்டம்: தி பிளடி கிங்டம்’ தொடரில் ஒன்றாக பணிபுரிந்துள்ளனர். அடுத்த ஆண்டு இந்தத் தொடர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சமந்தா முன்பு நடிகர் நாக சைதன்யாவை 2017-ல் திருமணம் செய்து 2021-ல் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். ராஜ் நிடிமோரு 2022ஆம் ஆண்டு தனது மனைவி ஸ்யாமலி தே–யிடமிருந்து விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.