சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் துவங்கின. தற்காலிக அவைத்தலைவர் கே.பி. முனுசாமி தலைமையில் இரு கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடக்கத்தில், கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேர் உள்பட பலருக்கு பொதுக்குழுவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பொதுக்குழுவில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது: “கழகத்தை காற்று கூட நுழையாதபடி காக்கும் காவல் அரண் மாதிரியான அமைப்பு இது. ஜெயலலிதாவுக்குப் பின் புதையலாய் எழுந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா நடந்து வந்த இந்த மேடை நினைவில் வருகிறது. அம்மா இனி இல்லை என்றாலும், அவரின் ஆன்மா எடப்பாடி பழனிசாமி உருவத்தில் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது.
அதிமுக தொண்டர்கள் தான் பெரிய கோவிலின் அஸ்திவாரத்தைப்போல கட்சியின் வலிமை. தொண்டர்கள் இருக்கும் வரை எந்த சக்தியும் கட்சியை உடைக்க முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு எதிரிகள் இருந்தாலும் துரோகிகள் இல்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரிகளும் துரோகிகளும் உள்ளனர்.
மேலும் வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவது உறுதி; அதை யாராலும் தடுக்க முடியாது. அதிமுக போர்க்குணம் கொண்ட புலி; தற்போது வேட்டைக்கு கிளம்பியுள்ளது. அது கோட்டையில் செல்வது தவிர வேறு பாதை இல்லை” என அவர் கூறினார்.
