2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அபாரமாகப் பந்துவீசி புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
இதன் மூலம் 33 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை அர்ஷ்தீப் 35 விக்கெட்டுகள் முறியடித்துள்ளார். மேலும், இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்திருந்த நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட் 34 விக்கெட்டுகள் சாதனையும் தகர்க்கப்பட்டது.
இதனால் வெறும் 19 இன்னிங்ஸ்களிலேயே இந்த மைல்கல்லை எட்டியுள்ள அர்ஷ்தீப் சிங், உலக அளவில் டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்ற கௌரவத்தையும் தற்போது வசப்படுத்தியுள்ளார். 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி, அர்ஷ்தீப்பின் இந்த துல்லியமான பந்துவீச்சால் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
