ரஷ்யக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் சிறுவன் உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பிராந்தியத்தின் ‘கோர்லி’ கடற்கரை கிராமத்தில் நேற்று அதிகாலை இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள தங்கும் விடுதி மற்றும் உணவகத்தில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது, உக்ரைன் தரப்பிலிருந்து வந்த 3 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) திடீரென குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தின. இதில் ஒரு ட்ரோன் தீப்பற்ற வைக்கும் குண்டுகளை வீசியதில், அந்தப் பகுதி முழுவதும் தீப்பிழம்பாக மாறியது. இந்த கோரத் தாக்குதலில் சிறுவன் உட்பட 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 6 சிறுவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா சாகரோவா கூறுகையில், “இது திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல். உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் மேற்கத்திய நாடுகளே இந்த உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்” என்று சாடியுள்ளார். ஆனால், தாங்கள் ராணுவ மற்றும் எரிசக்தி நிலையங்களை மட்டுமே குறிவைத்ததாக உக்ரைன் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். தனது குடியிருப்பு மீது உக்ரைன் தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறி, அமைதிப் பேச்சுவார்த்தையில் கடுமையான போக்கைக் கடைபிடிக்கப் போவதாக புதின் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், ‘நியூயார்க் போஸ்ட்’ நாளிதழின் தலையங்கத்தைத் தனது ‘ட்ரூத் சோசியல்’ பக்கத்தில் பகிர்ந்துள்ள டிரம்ப், “புதின் வடிப்பது நீலிக்கண்ணீர்; அமைதிக்குத் தடையாக இருப்பது ரஷ்யாதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

புதின் குடியிருப்பு மீதான தாக்குதல் முயற்சி என்ற தகவல் பொய்யானது என அமெரிக்க உளவுத்துறை ஏற்கனவே உறுதி செய்திருந்தது. உக்ரைனின் பொதுக்கட்டமைப்புகளை அழிக்கும் ரஷ்யா, தங்கள் மீது தாக்குதல் நடப்பதாகக் கூறுவது வேடிக்கையானது என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யா மீது இதுவரை மென்மையான போக்கை கடைபிடித்து வந்த டிரம்ப், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது சர்வதேச அரசியலில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.