சுவிட்சர்லாந்து நாட்டின் அல்பைன் மலைப்பகுதியில் அமைந்துள்ள கிரான்ஸ் மான்டனா சுற்றுலாத் தளத்தில் உள்ள லீ கான்ஸ்டலேஷன் என்ற இரவு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நேரிட்ட பயங்கர தீவிபத்தில் 47 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 1-ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில், மது பாட்டிலில் ஏற்றப்பட்டிருந்த மத்தாப்பு மத்தாப்புத் தீப்பொறி விடுதியின் மரத்தாலான மேற்கூரையில் பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மளமளவெனப் பரவிய தீயால் விடுதி முழுவதும் புகை மண்டலமாக மாறிய நிலையில், அங்கிருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் திணறினர். ஒரே ஒரு குறுகிய வெளியேறும் வழி மட்டுமே இருந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியும், தீயில் கருகியும் 47 பேர் உயிரிழந்தனர். மேலும் 115 பேர் படுகாயமடைந்த நிலையில், 10 ஹெலிகாப்டர்கள் மற்றும் 40 ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்கப்பட்டு சுவிட்சர்லாந்து மற்றும் அண்டை நாடுகளான இத்தாலி, ஜெர்மனி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவத்தையடுத்து சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மெலின் 5 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்க உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினர் என்பது குறிப்பிடத்தக்கது.