நாட்டின் தலைநகரான டெல்லியில், ஒரு வளர்ப்பு நாய் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அதன் உரிமையாளர் ஒரு காவலாளியை நடுரோட்டில் சரமாரியாகத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் வளர்த்து வந்த நாயை, அங்கிருந்த பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளி அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. தான் உயிருக்கு மேலாக வளர்த்த நாய் உயிரிழந்ததைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்தப் பெண், ஆத்திரத்தில் காவல் நிலைய வாசலிலேயே அந்தக் காவலாளியின் சட்டையைப் பிடித்து இழுத்து சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

​இந்தச் சம்பவம் டெல்லி காவல்துறையினரின் கண் முன்னே நடைபெற்ற போதிலும், அங்கிருந்த காவலர்கள் தலையிடாமல் வேடிக்கை பார்த்தது பொதுமக்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது செல்லப் பிராணியை இழந்த வலியால் அந்தப் பெண் கதறி அழுதும், ஆக்ரோஷமாக அந்தக் காவலாளியை அறைந்தும் நீதி கேட்கும் காட்சிகள் காண்போரைக் கண்கலங்கச் செய்துள்ளது. வளர்ப்புப் பிராணிகள் மீதான வன்கொடுமை மற்றும் அதற்குப் பிரதிபலனாக மக்கள் சட்டத்தைக் கையில் எடுக்கும் சூழல் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.