ஒடிசா மாநிலத்தில், தன்னைப் பிரிந்து சென்ற மனைவியை மீட்க அமானுஷ்ய வழிபாட்டில் ஈடுபட்ட ஒரு நபர், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவரை வெட்டிக்கொலை செய்து, அவரது தலையைத் தனது வீட்டுப் பூஜை அறையில் புதைத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தெபடமுண்டா கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் கார்செல் (45) என்பவர் கடந்த ஆகஸ்ட் 18 முதல் காணாமல் போயிருந்தார். இந்நிலையில், பகடா கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் இருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அவர் கடைசியாக சத்ருக்னா சாஹு (40) என்பவருடன் சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சத்ருக்னா சாஹுவைக் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில், மது அருந்தியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தால் கொலை நடந்ததாகக் கூறிய அவர், பின்னர் உண்மைச் சம்பவத்தை ஒப்புக்கொண்டார். சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மனைவியை மீண்டும் அடைவதற்காகவே இந்த அமானுஷ்யச் செயலில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சத்ருக்னா சாஹுவின் வீட்டுப் பூஜை அறையைத் தோண்டி சந்தோஷ் கார்செலின் தலையைக் காவல்துறையினர் மீட்டனர். மேலும், கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் பறிமுதல் செய்தனர். பாதிக்கப்பட்ட நபருக்கும் சத்ருக்னா சாஹுவிற்கும் முன்பின் அறிமுகம் இல்லாத நிலையிலும், திட்டமிட்டே அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார்.
சடலத்தை திசைதிருப்புவதற்காகக் குளத்தில் வீசியவர், தலையை மட்டும் நரபலி கொடுப்பதற்காகப் பூஜை அறையில் புதைத்து வைத்தது விசாரணையில் உறுதியானது. இந்தச் சம்பவம் தொடர்பாகச் சத்ருக்னா சாஹுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
