கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவி சோபி கிரிகோயரை 2023ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்தது சர்வதேச அளவில் பேசுபொருளாக இருந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி கேத்தி பெர்ரியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கடந்த மாதங்களில் செய்திகள் வெளியாகி, இருவரும் ஒன்றாக வெளிநாட்டில் சுற்றிப்பார்த்த புகைப்படங்களும் வெளியானது.
ஆனால், இதுவரை இருவரும் தங்கள் உறவைப் பற்றி எந்த அதிகாரப்பூர்வமான விளக்கமும் அளிக்காமல் இருந்தனர். இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோவுடனான தனது நெருங்கிய உறவை இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிட்டு கேத்தி பெர்ரி நேரடியாக உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ஜப்பானுக்கு அவர்கள் இணைந்து மேற்கொண்ட பயணத்தின் தருணங்களை கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அவற்றில், ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கேத்தி பெர்ரி இருவரும் உணவகத்தில் ஒன்றாக உணவருந்துவது, சிரிப்பிலும் உற்சாகத்திலும் நேரத்தை பகிர்ந்து கொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பதிவிற்கு, “டோக்கியோ சுற்றுப்பயணம் – சிறந்த தருணங்கள்” என கேத்தி பெர்ரி தலைப்பிட்டுள்ளார். மேலும் கேத்தி பெர்ரி வெளியிட்ட இந்த பதிவைத் தொடர்ந்து, இருவரின் உறவு பற்றிய செய்திகள் உலகளவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
