பிரபல கன்னட நடிகை கமலாஸ்ரீ (70) உடல்நலக்குறைவால் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.
இறுதி நாள்களில் வறுமையால் தவித்த அவருக்கு குடும்பத்தினரின் ஆதரவு இல்லாதது மேலும் துயரத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கணவரும், பிள்ளைகளும் எந்தவிதமான உதவியும் செய்யாமல் இருந்ததால், தனிமையிலும் வறுமையிலும் சிகிச்சை பெற்று வந்த அவர், இறுதியில் உயிரிழந்தது திரைத்துறையையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஒரு காலத்தில் கன்னட சினிமாவில் முக்கிய நடிகையாக பல படங்களில் நடித்த கமலாஸ்ரீ, பின்னர் சினிமாவிலிருந்து விலகிய பிறகு பொருளாதார சிக்கல்களில் சிக்கியிருந்தார். அவருடைய மறைவுக்கு சினிமா ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
அவரது மரணம், மூத்த கலைஞர்கள் எதிர்கொள்ளும் வறுமை மற்றும் தனிமை குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
