விருதுநகர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரூத் பாரத் திட்ட மேம்பாட்டுப் பணிகளை மாணிக்கம் தாகூர் எம்.பி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், “கடந்த 2023-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த ரயில் நிலையத்தில், இதுவரை 10 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. நிலுவையில் உள்ள அனைத்துப் பணிகளும் வரும் ஜனவரி மாதத்திற்குள் முழுமையாக முடிவடையும் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசிய அவர், மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு விவகாரத்தில் அமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் இறுதி முடிவெடுப்பார் என்றும் கூறினார். மேலும், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மீது வைக்கப்பட்ட சில விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் தங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ரயில்வே ஆட்குறைப்பு மற்றும் உஜ்வாலா சிலிண்டர் குறைப்புக்கு எதிராகப் போராடுவோம் என்றார். தொடர்ந்து திமுகவை விமர்சித்தவர், “திமுகவின் அகங்காரத்திற்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்; ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி ‘அரை மீசை பாரதி’ என்று அழைக்கப்படுவார், ஆனால் அது அவருக்கு நன்றாக இருக்காது” என்றும் காட்டமாகத் தெரிவித்தார். மேலும் முன்னதாக 25 மாநகராட்சியில் ஒரு மேயர் இடத்திலாவது தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றால் என்னுடைய ஒரு பக்கம் மீசையை எடுத்துக் கொள்கிறேன் என்று ஆர்எஸ் பாரதி முன்னதாக சவால் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.