குஜராத் மாநிலம் சூரத்தின் ‘உன்’ (Un) பகுதியில் உள்ள நூர் ரெசிடென்சி என்ற குடியிருப்பில், 2 வயது சிறுமி ஆயத் முன்ஃபிட் சையத் தெரு நாய்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை அந்தச் சிறுமி தனது வீட்டின் நுழைவு வாயில் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கேட்டுக்கு வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மூன்று தெரு நாய்கள் அந்தச் சிறுமியைச் சூழ்ந்து கொண்டு வெறித்தனமாகத் தாக்கியுள்ளன. இதில் ஒரு நாய் சிறுமியின் மேல் பகுதியில் பலமாக கடித்துள்ளது.

​இந்தத் தாக்குதல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ரேபிஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. தற்போது சிறுமியின் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் சூரத் மாநகராட்சி மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை” எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குழந்தைகளை வெளியே விளையாட விடவே பயமாக இருப்பதாகப் பெத்தவர்கள் கண்ணீருடன் கூறுகின்றனர்.