பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்ட ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை தொடர்ந்து, அவரது மனைவி டாக்டர் சவுமியா அன்புமணி ‘தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார்.
தமிழக பெண்களுக்கு கிடைக்காமல் உள்ள 10 முக்கிய உரிமைகளையும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடனும் இந்த பயணம் நடைபெறும் என பா.ம.க. அறிவித்துள்ளது.
இதற்கான முதல் நிகழ்ச்சி காஞ்சீபுரம் மாவட்டம் காமராஜர் சாலையில் உள்ள சித்தீஸ்வரர் மஹாலில் நடைபெற்றது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேச ஆரம்பித்த சவுமியா அன்புமணி, காஞ்சீபுரத்தில் தான் ஏராளமான முறை வந்திருப்பதாகவும், காமாட்சி அம்மன் தரிசனம், அத்திவரதர் வைபவம் போன்ற நகரத்தின் ஆன்மிக சிறப்புகளை நினைவு கூர்ந்தார்.
அதன் பிறகு “சிங்கப்பெண்ணே… எழுந்துவா! மகளிர் உரிமை மீட்பு பயணத்தை காஞ்சீபுரம் மண்ணிலிருந்து தொடங்குவதில் பெருமை கொள்கிறேன். நிம்மதியான, கடன்சுமையில்லா வாழ்க்கை பெண்களின் உரிமை; அதை வழங்க வேண்டியது அரசின் கடமை,” என்றார்.
பெண்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மேடையில் அமர்ந்திருந்த பெண்கள் மதுக்கடை ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர்கள் என்பதை கூறிய அவர், இவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள். திரையில் அல்ல, சமூகத்தில் உங்களுக்காக நிற்பவர்கள் இவர்கள்தான்,” என பாராட்டினார்.
பெண்களுக்கு வழங்கப்படும் ரூ.1000 உதவித்தொகை குறித்து பேசும்போது, “டாஸ்மாக் மூலம் வரும் பணத்தையே பெண்களுக்கு கொடுத்து அரசியல் லாபம் தேடுவது தவறு. பெண்கள் ஒருநாளுக்கு ரூ.1000 சம்பாதிக்கும் அளவுக்கு வேலை வாய்ப்புகளை அரசு தர வேண்டும். ரூ.500, ரூ.1000 கொடுத்தால் ஓட்டு போடச் சொல்வது பெண்களை அவமதிப்பது,” என கண்டித்தார்.
இதன் மூலம் பெண்களின் உரிமை, பொருளாதார முன்னேற்றம், மதுவிலக்கு போன்ற கோரிக்கைகளை முன்வைக்கும் இந்த பயணம் அடுத்த கட்டமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. மேலும் ரூ.500, ரூ.1000 என யாராவது பிச்சை போட்டால் வாங்கிக் கொள்வதால் அது அசிங்கம் இல்லையா மேலும் ஓட்டுக்காக அவர்கள் உங்களை ஏமாற்ற கொடுக்கிறார்கள் என்றார்.
