பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கட்சித் தலைமைப் காரணமாக, அன்புமணிதான் பாமக தலைவர் என்று தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை எதிர்த்து ராமதாஸ் தரப்பினர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில், வெளியான உத்தரவில், அரசியல் கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிடத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், பாமக தலைவர் யார் என்பதைச் சிவில் வழக்குகள் மூலம்தான் முடிவு செய்ய முடியும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னம் தொடர்பாக முடிவெடுக்க மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
இந்தத் தீர்ப்பின் மூலம், அன்புமணியைப் பாமக தலைவர் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்து அனுப்பிய கடிதங்கள் செல்லாது என்பது உறுதியாகி விட்டதாக ராமதாஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், அன்புமணி தலைவர் என்று அறிவிக்கத் தேர்தல் ஆணையத்திற்குச் சட்டப்படி அதிகாரம் இல்லை எனவும் நீதிமன்றம் கூறியுள்ளதால், தாம் தொடுத்த வழக்கில் வெற்றி கிடைத்திருப்பதாகப் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
