உத்தரப்பிரதேசம் உசஹைத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜலால்பூர் கிராமத்தை சேர்ந்த ஓம்பாலுக்கு, 32 ஆண்டுகளுக்கு முன் நீலம் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு மொத்தம் 9 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் மூவருக்கு ஏற்கனவே திருமணமும் நடந்துவிட்டது. கடந்த ஆண்டு மகன் நீரஜ் தற்கொலை செய்து கொண்டதால் குடும்பம் சோகத்தில் இருந்தது. இந்த நிலையில், 52 வயதான நீலம், கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு சென்று, தனது காதலர் பப்புவுடன் வாழத் தொடங்கினார். பின்னர் போலீசார் அவரை கணவர் வீட்டிற்கு அழைத்து வந்தபோதும், மீண்டும் பப்புவிடம் சென்றுவிட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம், நீலம் தனது 10 வயது மகள் அஞ்சலியையும் உடன் அழைத்துச் சென்று காதலரிடம் தங்கியிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓம்பால், பப்புவுக்கும் அவரது சகோதரருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்தார். பின்னர் நீலம் செப்டம்பர் 10 அன்று நேரடியாக காவல் நிலையம் வந்து, மருத்துவ பரிசோதனைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில், “நான் என் காதலருடனே வாழ விரும்புகிறேன், கணவர் மற்றும் பிள்ளைகளுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை” என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிமன்றம், நீலத்தை பப்புவுடன் அனுப்ப உத்தரவிட்டது.
இதனால் கணவர் ஓம்பாலும், பிள்ளைகளும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். “என் உழைப்பில் வாங்கிய நிலம் மனைவி பெயரில் உள்ளது. அதன் மதிப்பு ரூ.15-18 லட்சம் இருக்கும். அதோடு, மருமகளின் நகைகளையும் எடுத்துச் சென்றுள்ளார். 10 வயது மகள் தாயுடன் இருப்பது சரியல்ல” என ஓம்பால் வேதனையுடன் கூறியுள்ளார். திருமண விழாவில் ஏற்பட்ட அறிமுகம், காதலாகி, இறுதியில் 32 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை வாழ்ந்த தாயை 9 பிள்ளைகளை விட்டு காதலரிடம் கொண்டு சென்ற சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
