மதுரையில் நடைபெற்ற ‘மறவோம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் நாடாளுமன்றப் பேச்சை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ் குறித்து கமல் ஆற்றிய கன்னிப்பேச்சு பலரை வியக்க வைத்ததோடு, சிலரை புலம்பவும் வைத்துள்ளதாக அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
“கமல் பேசுவது புரியவில்லை என்று சிலர் சொல்வார்கள்; உண்மையில் அவர்களுக்குப் புரியாமல் இல்லை, புரிந்துகொள்ளக் கூடாது என்று நினைக்கிறார்கள்” என முதல்வர் விமர்சித்தார்.
மக்கள் நீதி மய்யம் ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதையொட்டி வாழ்த்து தெரிவித்த முதல்வர், சமநீதிக்காகவும் சமூகநீதிக்காகவும் கமலின் குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் போற்றும் வகையில் பேசிய அவர், “அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லை” என்ற கமலின் பாடல் வரியைக் குறிப்பிட்டு, காந்தியின் கொள்கைகளைக் காக்க அனைவரும் ஒன்றாக இணைந்து வெல்வோம் என அறைகூவல் விடுத்தார்.
