சீனாவின் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த 25 வயது வாலிபரான வாங் ஜுன்மிங் என்பவரின் வாழ்க்கை வரலாறு, தற்போது உலக அளவில் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. வாங் ஜுன்மிங்கிற்கு தற்போது வயது 25 என்றாலும், அவரது உடல் மற்றும் மன வளர்ச்சி ஒரு சிறிய குழந்தையைப் போலவே நின்று போயுள்ளது. வெறும் 66 சென்டிமீட்டர் உயரமே கொண்ட இவரை, குடும்பத்தினர் அன்போடு ‘பேபி’ என்றே அழைக்கின்றனர்.
சாதாரண இளைஞர்களைப் போல படிப்பு, வேலை என எவ்வித கவலையும் இன்றி வாழும் இவருக்கு, முகத்தில் மட்டும் வயது முதிர்வுக்கான சுருக்கங்கள் தென்படுகின்றன. இவரது தங்கை ஷியாவோலிங், தனது அண்ணனின் அன்றாட வாழ்க்கை முறையை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பகிரத் தொடங்கியதை அடுத்து, இந்த விசித்திரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து மில்லியன் கணக்கானோரை உலுக்கியுள்ளது.
சமூக வலைத்தளங்களின் உதவியால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வாங் ஜுன்மிங்கிற்கு அதிநவீன மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடு காரணமாகவே இவரது உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், இவரது உடலில் உள்ள ‘POU1F1’ என்ற மரபணுவில் ஏற்பட்ட அசாதாரண மாற்றமே இதற்குக் காரணம் என்றும், உலகிலேயே இதுபோன்ற மிகக் குறைவான பாதிப்புகளே பதிவாகியுள்ளன என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுவயதிலேயே வறுமையின் காரணமாக இவருக்கு முறையான சிகிச்சை அளிக்க முடியாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இவருக்குத் தீவிர ஹார்மோன் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதால், எதிர்காலத்தில் அவர் சொந்தமாகக் கால்களால் நடப்பார் மற்றும் அவரது மனவளர்ச்சி மேம்படும் என்ற புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.
