விருதாச்சலம் அருகே தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தோட்ட வீடு தற்போது கடும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “நான் உட்காரும் நாற்காலி அருகில், வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு மிக விலை உயர்ந்த ஒட்டுக்கேட்கும் கருவி பதுக்கப்பட்டுள்ளது. இதை யார் வைக்கிறார்கள் என்பதைப் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்” என அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னையைச் சேர்ந்த தனியார் துப்பறியும் நிறுவனம் இப்போது பாமகத் தலைமையிடம் விரிவான ஆய்வில் ஈடுபட்டுள்ளது. ராமதாஸ் உட்காரும் தைலாபுரம் தோட்ட வீட்டில் உள்ள ஹாலில், சோபாக்கள், நாற்காலிகள் மற்றும் முக்கிய பகுதியில் ஒவ்வொரு அங்குலமும் சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே பரிமுதல் செய்யப்பட்ட ஒட்டுக்கேட்கும் கருவி தொடர்பான சிம்கார்ட், அதன் உரிமையாளர்கள், Recharge செய்யபட்ட இடம் மற்றும் அவை தொடர்புடைய அனைத்து தொழில்நுட்ப விபரங்களும் ஆராயப்பட்டு வருகிறது.
தற்போது இந்த கருவி எப்படி நிறுவப்பட்டது? யாரின் உத்தரவின் பேரில் செயல்பட்டது? எப்போது இருந்து செயல்படுகிறது? என்பது தொடர்பாக மேலும் விவரங்கள் அடுத்த கட்ட ஆய்வில் தெரியவரும் என கூறப்படுகிறது. மேலும், ராமதாஸ் உட்காரும் இடத்திலிருந்து வெளியேறும் தகவல்கள் எவ்வாறு வெளியில் போய்க் கொண்டிருக்கின்றன என்பதையும் இந்த தனியார் துப்பறியும் நிறுவனம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
இது தொடர்பாக முழுமையான தகவல்கள் கிடைக்கும் வரை, தைலாபுரம் தோட்டத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
