தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பாஜக தலைவரின் வழிகாட்டுதலின்படி, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க உதயநிதி ஸ்டாலின் துள்ளிக் குதித்தார” என்று விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அதிரடிப் புகாரைக் கிளப்பியுள்ளார். முன்னதாக,  திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “பாஜகவின் வெற்றிக்கு மோடியோ, அமித்ஷாவோ காரணம் அல்ல; காங்கிரஸ்தான் காரணம். பதவிக்காகச் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்ட, குறைந்தபட்ச நன்றியோ நாகரிகமோ இல்லாத காங்கிரஸை இனி எந்தக் காலத்திலும் நம்பப் போவதில்லை. அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று சாடியிருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசியதாவது, கடந்த மே 4-ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோதே, திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்கத் திட்டமிட்டன. இதற்காக பாஜகவின் முக்கியத் தலைவர் ஒருவர் இரு கட்சிகளுக்கும் இடையே ‘கனெக்டிங் கால்’ மூலம் பேசினார். அதற்கு ஆளுநரின் மறைமுக ஒத்துழைப்பும் இருந்தது.

கொள்கைகளைக் குப்பையில் போட்டுவிட்டு, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க உதயநிதி ஸ்டாலின் சம்மதம் தெரிவித்து துள்ளிக் குதித்தார். திமுக – அதிமுகவின் இந்தத் துரோகத் திட்டத்தைக் காங்கிரஸ் கட்சி உடைத்தெறிந்ததால்தான், தற்போது எங்கள் மீது உதயநிதி காழ்ப்புணர்ச்சியோடு பேசுகிறார். மேலும் பேசிய அவர், “உதயநிதி ஸ்டாலின் இனி அளந்து பேச வேண்டும். எதிர்காலத்தில் பாஜகவுடன் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே கூட்டணி அமைப்பது உறுதி” என்று மாணிக்கம் தாகூர் அதிரடியாகத் தெரிவித்தார்.

மேலும் உதயநிதியின் விமர்சனத்திற்குப் பதிலடியாக, தேர்தல் நள்ளிரவில் நடந்ததாகக் கூறப்படும் ரகசியங்களை காங்கிரஸ் எம்பி அம்பலப்படுத்தியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.