விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு, கட்சியின் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகளுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து தனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தேர்தல் முடிவுகளுக்குப் பின் வியூகங்களை மாற்றி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க ஆதரவு அளித்ததுடன், அக்கட்சியின் அமைச்சரவையிலும் பங்கெடுத்துள்ளது.

விசிக சார்பில் வன்னியரசு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் களம் ஒரு பக்கமும், ஆட்சி அதிகாரப் பகிர்வு மறுபக்கமும் என விசிக எடுத்துள்ள இந்த இரட்டை நிலைப்பாடு அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் சில  நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விசிகவின் இந்த அரசியல் மாற்றத்தைக் கடுமையாக விமரிசித்து முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு விடுத்துள்ள அறிக்கையில், நேற்று வரை எந்த ஒரு நடிகரை (விஜய்) ‘ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பெற்றெடுத்த பிள்ளை’ என்று விசிக தலைமை மிகக் கடுமையாக விமரிசித்ததோ, இன்று அதே பிள்ளையைத் தத்தெடுப்பது போன்றதொரு அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இது, விசிக இதுவரை சமரசமின்றி கட்டிக்காத்த கொள்கைகளிலும், கோட்பாடுகளிலும் முற்றிலும் தடம்மாறத் தயாராகிவிட்டது என்பதையே அப்பட்டமாகக் காட்டுகிறது.
‘விசில் அடிப்பவர்கள் எல்லாம் தியேட்டருக்குத்தான் செல்ல வேண்டும், சட்டமன்றத்திற்கு வரக் கூடாது; அவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் பேசிய அரசியலையும் கொள்கைகளையும் வீழ்த்த வந்தவர்கள்’ என்று அன்று சூளுரைத்த விசிக தலைமை, இன்று அதே சக்திகளுடன் கைகோர்க்கவும், இயக்கத்தின் அடிப்படை லட்சியங்களை மழுங்கடிக்கவும் முற்படுவது முரண்பாட்டின் உச்சமாகும்.

கொள்கை உறுதியும், சித்தாந்தத் தெளிவுமே தங்களைப் போன்ற இயக்கத் தோழர்களுக்கு இதுவரை உந்துசக்தியாக இருந்தன. அந்த அடிப்படை அரசியல் அறம் தடம் மாறும்போது, என்னால் மௌனமாக கடந்து செல்ல முடியவில்லை. மிகுந்த மனவேதனையோடு இந்த யதார்த்தத்தை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளேன். சமீபகாலமாக விசிக தலைமையின் செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் பெரும் வியப்பையும் வேதனையையும் அளிக்கின்றன. ஒரு தெளிவான நிலைப்பாடின்றி, அடிக்கடி தடுமாறுவது தலைமையின் இயல்பாக மாறியுள்ளது.

மேலும் நேற்று ஒரு நிலைப்பாடு, இன்று ஒரு நிலைப்பாடு, நாளை செய்தியாளர் சந்திப்பில் வேறொரு நிலைப்பாடு எனத் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை உருவாக்குகிறது. திமுக கூட்டணியில் வாக்குக் கேட்டுவிட்டு, தற்பொழுது தவெக அமைச்சரவையில் விசிக அங்கம் வகிப்பது தார்மீக ரீதியாக ஏற்புடையதல்ல என்றும், கட்சியின் இத்தகைய சந்தர்ப்பவாத அரசியலால் அதிருப்தியடைந்து, மிகுந்த மனவேதனையுடன் இயக்கத்திலிருந்து விலகுவதாகவும் பனையூர் பாபு தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.