அதிமுகவை அழிக்க வேண்டும் என்கிற பாஜகவின் நீண்ட கால கனவு தற்போது நனவாகி வருவதாகக் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற மக்கள் செல்வாக்கு மிக்க மாபெரும் தலைவர்களால் வழிநடத்தப்பட்ட ஒரு பேரியக்கம், இன்று இரண்டுபட்டு நிற்பது வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாஜகவின் பிடியில் சிக்கியதாலேயே அதிமுக இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் தனது பேட்டியில் சாடியுள்ளார்.

​மேலும், இந்தியாவில் இதுவரை பாஜகவுடன் கூட்டணி வைத்த எந்தவொரு மாநிலக் கட்சியும் உருப்பட்டதாகச் சரித்திரமே இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மற்ற கட்சிகளைப் பலவீனப்படுத்தித் தங்களை வளர்த்துக் கொள்வதே பாஜகவின் பாணி என்றும், அதே நிலைதான் இன்று அதிமுகவிற்கும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஜோதிமணியின் இந்த விமர்சனம் பாஜக – அதிமுக உறவு மற்றும் அதிமுகவின் தற்போதைய உட்கட்சிப் பூசல் குறித்துப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.