இங்கிலாந்தின் புகழ்பெற்ற ‘தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் தொடருக்கான ஏலப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்படுவதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) முக்கிய விளக்கம் அளித்துள்ளது.
இந்தத் தொடரில் உள்ள அணிகளில் பெரும்பாலானவை ஐபிஎல் (IPL) உரிமையாளர்களுடன் தொடர்புடையவை. இதனால், பாகிஸ்தான் வீரர்களைத் தேர்ந்தெடுக்க உரிமையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும், இது ஒரு வகையான ‘நிழல் தடை’ (Shadow Ban) என்றும் செய்திகள் பரவின. இதற்கு மொயீன் அலி மற்றும் மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பாகிஸ்தான் வீரர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
சர்ச்சை முற்றிய நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் எட்டு அணிகளின் உரிமையாளர்கள் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது. “வீரர்கள் தேர்வு என்பது அவர்களின் திறமை, அவர்கள் விளையாடக் கிடைக்கும் நாட்கள் மற்றும் அணியின் தேவையைப் பொறுத்தே அமையும். இதில் தேசத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் வீரர்களைப் புறக்கணிக்கும் பேச்சுக்கே இடமில்லை. பாகுபாடுகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள இறுதிப் பட்டியலில், மொத்தம் 63 வீரர்களில் 14 பாகிஸ்தான் வீரர்கள் ஏலத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். ஹாரிஸ் ரவூப், ஷாகீன் அப்ரிடி, உஸ்மான் தாரிக், ஷதாப் கான், சைம் அயூப், முகமது அமீர், இமாத் வாசிம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். நடப்பு டி20 உலகக்கோப்பையில் 383 ரன்கள் குவித்து அசத்திய சாஹிப்சடா ஃபர்ஹான் இந்தப் பட்டியலில் இடம் பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் பிரிவில் சாடியா இக்பால் மற்றும் பாத்திமா சனா ஆகியோர் ஏலப் பட்டியலுக்குத் தேர்வாகியுள்ளனர். மகளிர் ஏலம் மார்ச் 11-ம் தேதியும், ஆண்கள் பிரிவு ஏலம் மார்ச் 12-ம் தேதியும் நடைபெறவுள்ளது.
மேலும் ஐபிஎல் உரிமையாளர்களுக்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கும் இடையிலான இந்த ‘நிழல் யுத்தம்’ முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களை எந்த அணிகள் வாங்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
