2026 டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள், மிகுந்த ஏமாற்றத்துடன் நாடு திரும்பினர். விமான நிலையத்தில் அவர்களுக்கு எவ்வித உற்சாக வரவேற்பும் அளிக்கப்படாததுடன், ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கும் அவர்கள் ஆளாகியுள்ளனர்.

இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெற்று வரும் உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றோடு பாகிஸ்தான் அணி வெளியேறியது. இந்நிலையில், கேப்டன் சல்மான் அலி ஆகா, பாபர் அசாம், ஷாகீன் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் சிறு சிறு குழுக்களாக பாகிஸ்தான் திரும்பினர். விமான நிலையத்தில் அவர்களைக் கண்ட பொதுமக்களும் ரசிகர்களும் எவ்வித எதிர்வினையும் காட்டாமல் அமைதி காத்தனர். ஒரு சாதாரண குடிமகனைப் போல வீரர்கள் முகத்தைத் தொங்கப்போட்டபடி வெளியேறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர் தோல்விகளால் அதிருப்தியில் உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), வீரர்களுக்கு கடும் நிதியியல் தண்டனை வழங்க ஆலோசித்து வருகிறது. இதன்படி, ஒவ்வொரு வீரருக்கும் சுமார் 50 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 15 லட்சம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

வீரர்களின் ஊதியத்தைக் குறைப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், இந்த நிதியியல் தண்டனை கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் வாரியம் மட்டுமல்லாது, அந்நாட்டு அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகளும் அணியின் செயல்பாட்டில் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர். “இவ்வளவு வசதிகள் செய்து கொடுத்தும், பெரிய தொடர்களில் தேசத்தை வீரர்கள் ஏமாற்றி வருகின்றனர்” என்பதே அங்குள்ள பொதுவான கருத்தாக உள்ளது.

மேலும் இந்தத் தொடரில் பரம எதிரியான இந்தியா மற்றும் பலம் வாய்ந்த இங்கிலாந்து ஆகிய அணிகளிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. நியூசிலாந்துக்கு எதிரான முக்கிய ஆட்டம் மழையால் ரத்தானதும் பாகிஸ்தானுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. கடைசிப் போட்டியில் இலங்கையை வென்ற போதிலும், ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி வாய்ப்பை அந்த அணி இழந்தது.