மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வாழ்வா-சாவா ஆட்டத்தில், இந்திய அணியை ஒற்றை ஆளாக வெற்றிக்கு அழைத்துச் சென்ற சஞ்சு சாம்சன், தற்போது கிரிக்கெட் உலகின் பேசுபொருளாக மாறியுள்ளார். ஈடன் கார்டனில் அவர் விளையாடிய இந்த வரலாற்று இன்னிங்ஸ், இந்தியாவிற்கு அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. நடப்புத் தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்தை வீழ்த்த, மீண்டும் சஞ்சு சாம்சன் அதிரடி காட்டுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ள சஞ்சு சாம்சனை, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். இக்கட்டான சூழலில் பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டெடுத்த அவரது நிதானம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
🚨 Axar Patel interviewing Sanju Samson on the team bus after his iconic 97-run innings while traveling to Mumbai.
Also, Axar Patel asked, “Aapka debut kab hua tha?” and Sanju just started laughing 😂 pic.twitter.com/Xa7qf5PHRF
— Sonu (@Cricket_live247) March 2, 2026
இந்த நிலையில் சஞ்சு சாம்சனும் அக்சர் படேலும் கலகலப்பாகப் பேசிக்கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சஞ்சுவின் வெற்றியைப் பாராட்டுவது போல் பேசி, அவரது வயதைக் குறிப்பிட்டு அக்சர் படேல் கிண்டல் செய்துள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர், “நமக்கு வெற்றி கிடைத்து நாம் பெருமையாக உணரும் போதெல்லாம், நமது வயதை நினைவூட்டி நம்மைக் கலாய்க்கும் ஒரு நண்பன் ஒவ்வொருவருக்கும் இருப்பான். சஞ்சுவுக்கு அக்சர் படேல் அப்படி ஒரு நண்பர்!” என வேடிக்கையாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்கள் இவ்வளவு உற்சாகமாகவும், நெருக்கமாகவும் இருப்பது ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
