2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தேர்வுக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து பிரபல முன்னாள் நடுவர் அலீம் தார் இன்று (மார்ச் 2) அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார்.
சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, உலகக்கோப்பையில் அரையிறுதிக்குக் கூட முன்னேறாமல் வெளியேறியது. இதனால் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் விமர்சகர்கள் பாகிஸ்தான் அணியைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். இந்த அழுத்தம் காரணமாக, 2024 அக்டோபரில் தேர்வுக் குழுவில் இணைந்த அலீம் தார், தனது பதவியைத் துறந்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, ஒரு பெரிய தொடரில் தோல்வி அடைந்தால் பயிற்சியாளர்கள் அல்லது நிர்வாகிகள் மாற்றப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இருப்பினும், சர்வதேச அளவில் மதிக்கப்படும் அலீம் தாரின் இந்த விலகல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அணியின் மோசமான செயல்பாட்டிற்குப் பொறுப்பேற்று, தேர்வுக் குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், வீரர்களுக்கும் வாரியம் செக் வைத்துள்ளது. உலகக்கோப்பையில் சொதப்பிய ஒவ்வொரு வீரருக்கும் தலா 50 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 15 லட்சம்) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
56 வயதான அலீம் தார், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) சிறந்த நடுவருக்கான விருதை மூன்று முறை வென்றவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக 448 சர்வதேசப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கடந்த 2024-25 உள்நாட்டுப் பருவத்துடன் ஓய்வு பெற்ற அவர், பாகிஸ்தான் கிரிக்கெட்டைச் சீரமைக்கத் தேர்வுக் குழுவில் சேர்க்கப்பட்டார். ஆனால், குறுகிய காலத்திலேயே அவர் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அலீம் தார் விலகினாலும், தேர்வுக் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களான அசார் அலி, ஆசாத் ஷபிக் மற்றும் ஆகிப் ஜாவேத் ஆகியோர் தற்போதைக்குத் தங்கள் பதவியில் நீடிக்கின்றனர். மேலும் தரவு ஆய்வாளராக உஸ்மான் ஹாஷ்மி செயல்பட்டு வருகிறார்.
