பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றது குறித்து இளம் வீரர் அக்னி தேவ் சோப்ரா அதிரடி விளக்கம் அளித்துள்ளார். அதாவது பிரபல பாலிவுட் இயக்குனர் விது வினோத் சோப்ராவின் மகனான அக்னி தேவ் சோப்ரா, தற்போது அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்கு கிரிக்கெட் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், 2026-ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரின் வீரர்கள் பதிவுப் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது. சுமார் 6 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் அடிப்படை விலையில், அமெரிக்க வீரராக அவர் பதிவு செய்துள்ளதாகக் கூறப்பட்ட தகவல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியது.
இந்த விவகாரம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள அக்னி தேவ் சோப்ரா, “ஒரு குறிப்பிட்ட தொடரில் நான் பங்கேற்பதாக வெளிவரும் செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் திசைதிருப்பக் கூடியவை. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாட நான் விண்ணப்பிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது முழு கவனமும் அமெரிக்க கிரிக்கெட் பயணத்திலும், எனது நீண்ட கால இலக்குகளிலும் மட்டுமே உள்ளது. எனவே, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.
— Anupama Chopra (@anupamachopra) February 7, 2026
இவரது இந்தப் பதிவை அக்னி தேவின் தாயாரும் பிரபல சினிமா விமர்சகருமான அனுபமா சோப்ராவும் பகிர்ந்துள்ளார். இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் (2025 வரை) விளையாடிய அக்னி தேவ் சோப்ரா, ரஞ்சி கோப்பை வரலாற்றில் அறிமுகமான முதல் 4 போட்டிகளிலும் சதம் விளாசி உலக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2023-24 ரஞ்சி சீசனில் 939 ரன்களைக் குவித்து பிசிசிஐ-யின் ‘மாதவராவ் சிந்தியா’ விருதைப் பெற்றார். 2024-25 சீசனில் 1,800-க்கும் அதிகமான ரன்களை 94.94 என்ற சராசரியில் குவித்து அசத்தினார்.
மேலும் இடதுகை பேட்டரான இவர், தற்போது அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ளதால் உலகெங்கிலும் உள்ள டி20 லீக் போட்டிகளில் விளையாடத் தகுதி படைத்தவர் என்றாலும், பாகிஸ்தான் லீக்கில் சேரவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
