இந்தியாவிடம் அடைந்த 61 ரன்கள் வித்தியாசத்திலான தோல்வியைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் வீரர்களை முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் வஸீம் அக்ரம் கடுமையாகச் சாடியுள்ளார். தோல்வி குறித்து வஸீம் அக்ரம் அ கூறியிருப்பதாவது: “டாஸ் வென்றபோதே நாம் தவறு செய்துவிட்டோம். நமது பலமே சுழற்பந்து வீச்சுதான். மெதுவான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்துவிட்டு, இலக்கை தற்காத்திருக்க வேண்டும். ஆனால், 175 ரன்கள் என்ற இலக்கை விரட்டும்போது பாகிஸ்தான் வீரர்கள் கடும் அழுத்தத்திற்கு ஆளாகினர்.”
மேலும், இந்திய வீரர் இஷான் கிஷனைப் பாராட்டிய அக்ரம், “அபிஷேக் சர்மா ஆட்டமிழந்த பிறகு, இஷான் கிஷன் ஆடிய விதம் அபாரமானது. அவர் ஒரு ஸ்பெஷல் வீரர் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தியா 47 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இருந்தபோது, நமது சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக்கை பந்துவீச அழைத்திருக்க வேண்டும். ஆனால், கேப்டன் செய்த தவறு விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் போனது” என்றார்.
पाकिस्तान की हार पर देखिये लीजेंड वसीम अकरम ने क्या कहा। ख़ासतौर से तारिक उस्मान के इस्तेमाल को लेकर उनकी प्रतिक्रिया सुनने के लायक़ है। #INDvsPAK #IndvsPak2026 pic.twitter.com/xHxyfh3k3g
— 𝐇𝐚𝐫𝐬𝐡 𝐊𝐮𝐦𝐚𝐫 (@harshktweets) February 16, 2026
இந்தியப் பந்துவீச்சாளர்களையும் பாகிஸ்தான் வீரர்களையும் ஒப்பிட்டுப் பேசிய அவர் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பந்தை வீசிய லென்த் மிகச்சரியாக இருந்தது. இதுதான் ஒரு தரமான பந்துவீச்சுக்கு அடையாளம். ஆனால் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது கடும் அழுத்தத்தில் தெரிந்தார். அவர் வீசிய ஷார்ட்-பிட்ச் பந்துகள் இந்திய வீரர்களுக்குச் சாதகமாக அமைந்தன.
சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற வேண்டுமானால், பாகிஸ்தான் தனது அடுத்த போட்டியில் நமீபியாவுக்கு எதிராகக் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இந்த நிலையில், மோசமான ஃபார்ம் காரணமாக பாபர் அசாம், ஷஹீன் அப்ரீதி மற்றும் ஷதாப் கான் ஆகிய முன்னணி வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் “இனி பயிற்சியாளரோ, பிசிபி-யோ உங்களுக்கு உதவ முடியாது; நீங்களாகவே மனரீதியாகத் தேறி விளையாடினால் மட்டுமே மீண்டு வர முடியும்” என அக்ரம் வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
