பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்ட போதிலும், அங்குள்ள மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, லாகூர் பகுதியில் பெண் காவலர் ஒருவர் சீருடையுடன், தோளில் ஒரு பறவையை அமர வைத்துக்கொண்டு இப்படத்தின் ‘F9LA’ பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இப்படத்தில் அக்ஷய் கண்ணா ஏற்றுள்ள ‘ரஹ்மான் டகாய்ட்’ கதாபாத்திரத்தின் சிக்னேச்சர் ஸ்டெப்புகளை அவர் அப்படியே பிரதிபலிப்பது நெட்டிசன்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் பாகிஸ்தான் திருமண விழாக்களில் ஒலிக்கத் தொடங்கிய நிலையில், தற்போது காவல்துறை அதிகாரி ஒருவரே இதற்கு நடனமாடியுள்ளது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அந்நாட்டு அதிகாரப்பூர்வ தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

மற்றொருபுறம், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி பங்கேற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் ‘துரந்தர்’ படத்தின் பாடல் ஒலித்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோவின் புகைப்படங்களை இப்படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, படக்குழுவினருக்கு எதிராக கராச்சி நீதிமன்றத்தில் பிலாவல் பூட்டோவின் கட்சி ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளது.
<a href=”http://

“>
தனது தாயின் பிம்பத்தை தவறாகச் சித்தரிப்பதாகக் கூறி சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிலாவல் பூட்டோ அதே படத்தின் பாடலுக்கு வரவேற்பு பெறுவது பெரும் முரண்பாடாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இந்தியாவில் இப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. வெளியான 21-வது நாளில் மட்டும் 26 கோடி ரூபாய் வசூலித்துள்ள இப்படம், ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 1000 கோடி ரூபாயை எட்டி பிரமிக்க வைத்துள்ளது.