பாகிஸ்தானின் அதிகாரம் மிக்க ராணுவ தளபதியாக இருக்கும் அசிம் முனீர், தற்போது நிம்மதியற்ற ஒரு பயங்கரமான சூழலில் வாழ்ந்து வருகிறார். தன்னை யாராவது கொன்றுவிடுவார்களோ என்ற அச்சத்தில், அவர் தனது சீருடைக்கு அடியில் எப்போதும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டை அணிந்துள்ளார்.

அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், அவர் தூங்கும் போது கூட அந்த ஜாக்கெட்டை கழற்றுவதில்லையாம். அதுமட்டுமின்றி, எப்போதும் தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றை எந்நேரமும் தன் அருகிலேயே வைத்திருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

1988-ல் விமான விபத்தில் மர்மமான முறையில் இறந்த முன்னாள் சர்வாதிகாரி ஜியா-உல்-ஹக்கிற்கு ஏற்பட்ட கதி தனக்கும் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் தான் அவரை இப்படி ஆட்டிப்படைத்து வருகிறது.

தனது பாதுகாப்புப் படையில் இருக்கும் இளம் பயிற்சி அதிகாரிகளைக் கூட அசிம் முனீர் நம்புவதில்லை. இதனால் அவர்களைப் பாதுகாப்பிலிருந்து அதிரடியாக நீக்கிவிட்டு, மிகவும் விசுவாசமான மற்றும் மூத்த வீரர்களை மட்டுமே தனது நான்கு அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் நிறுத்தியுள்ளார்.

சுமார் 15,000 வீரர்கள் கொண்ட சிறப்புப் பாதுகாப்புப் பிரிவின் ஒரு பகுதி இவரை எந்நேரமும் சுற்றி வருகிறது. பாகிஸ்தான் மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் தனக்காக ஆதரவு திரட்டி வரும் முனீர், தற்போது ஃபீல்ட் மார்ஷல் பட்டத்தையும், அணு ஆயுதங்களை இயக்கும் அதிகாரத்தையும் கையில் வைத்துள்ளார். இத்தனை அதிகாரம் இருந்தும், ஒரு நிமிடம் கூட நிம்மதியாகக் கண் அயர முடியாத நிலையில் அவர் இருப்பது உலக அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.