பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தலைமையிலான அரசு நடைபெற்று வருகின்றது. இவருடைய அமைச்சரவையில் கட்டுமானம் மற்றும் தொலைதொடர்பு துறை மந்திரியாக சர்தார் அப்துல் ரகுமான் கேத்ரான் உள்ளார். இவருடைய வீடு பர்கான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவருடைய வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் ஒரு பெண் மற்றும் அவருடைய இரண்டு மகன்களின் உடல்கள் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு வீசப்பட்டுள்ளது. இந்த உடல்களை கடந்த திங்கள்கிழமை அன்று போலீசார் மீட்டுள்ளனர்.

இதனை அடுத்து போலீசார் மூன்று உடல்களிலும் துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இது குறித்து அந்த பெண்ணின் கணவரான கான் முகமது மார்ரீ என்பவர் மந்திரி கேத்ரான் மீது குற்றம் சுமத்தினார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது “கடந்த 2019 ஆம் ஆண்டில் கேத்ரானுக்கும் எனது மகனுக்கும் இடையே ஏற்பட்ட முதலில் தனது மனைவி மற்றும் ஏழு குழந்தைகளை கேத்ரான் அவருடைய வீட்டில் அமைக்கப்பட்ட சிறைச்சாலையில் வைத்து அடைத்து உள்ளார். அதன் பின் எனது குடும்பத்தில் உள்ளவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் தனது 11 வயதுடைய மகள் உள்பட 5 குழந்தைகள் இன்னும் அவருடைய வீட்டில் உள்ள சிறையில் கைதிகளாக அடைக்க ப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் மந்திரி சர்தார் அப்துல் ரகுமான் கேத்ரானே போலீசார் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் நேரில் வரும் வரையில் பெண் மற்றும் அவருடைய இரண்டு மகன்களின் உடல்களை புதைக்க மாட்டோம் எனக் கூறி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.