அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 37 நாட்களைக் கடந்துள்ள நிலையில், 3,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியுள்ளது. இந்தப் போரை நிறுத்த பாகிஸ்தான், சீனா, சவுதி அரேபியா மற்றும் துருக்கி போன்ற நாடுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.
குறிப்பாக, ‘இஸ்லாமாபாத் உடன்படிக்கை’ என்ற பெயரில் பாகிஸ்தான் முன்வைத்துள்ள அமைதித் திட்டத்தை அமெரிக்காவும் சீனாவும் ஆதரிக்கின்றன. இதில் உடனடி போர் நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது போன்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இருப்பினும், இந்த அமைதி முயற்சிகளுக்கு ஈரான் இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை. தனது நாட்டின் மீதான தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என்றும் ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், ஈரான் தனது பிடிவாதத்தை தளர்த்தினால் மட்டுமே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படும் சூழல் உள்ளது. தற்போது நிலவும் இந்த இழுபறியால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நீடிக்கிறது.
