வெளிநாட்டில் வேலை தேடிச் செல்லும் இந்தியர்களின் நிலை குறித்து வந்தனா என்ற இந்தியப் பெண் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவிலிருந்து நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்த அவர், அங்குள்ள வேலைவாய்ப்புச் சந்தை மிகவும் சவாலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, நியூசிலாந்து நிறுவனங்கள் புதியவர்களை விட, அங்கேயே பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்களுக்கே முன்னுரிமை அளிப்பதாக அவர் ஆதங்கப்பட்டுள்ளார். இது வேலை தேடும் பல புலம்பெயர்ந்தவர்களுக்கு ஒரு பெரிய தடையாக இருப்பதாகவும், அதீத பொறுமையும் விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே அங்கு பிழைக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வந்தனாவின் இந்தப் பதிவு வெளிநாடுகளில் வேலை தேடும் பல இந்தியர்களின் குமுறலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதற்குப் பதிலளித்த பல நெட்டிசன்கள், தாங்களும் நூற்றுக்கணக்கான இடங்களுக்கு விண்ணப்பித்தும் வேலை கிடைக்காமல் தவிப்பதாகத் தங்கள் கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளை விட நியூசிலாந்தில் வேலைவாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருப்பதாகவும், உள்ளூர் அனுபவம் இல்லாதவர்களுக்குக் கதவுகள் அடைக்கப்படுவதாகவும் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒரு புதிய நாட்டில் வாழ்க்கையைத் தொடங்க ஆசைப்பட்டுச் செல்லும் இந்தியர்களுக்கு, அங்குள்ள எதார்த்த நிலை மிகவும் சிக்கலானதாக இருப்பதை இந்த விவாதம் உணர்த்துகிறது.
