மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில், அமெரிக்காவின் நவீன போர் விமானங்களை ஈரான் ஏவுகணைகள் மூலம் வீழ்த்தியதாக வெளியாகும் தகவல்கள் உலகையே அதிரவைத்துள்ளன. கடந்த 24 மணிநேரத்தில், அமெரிக்காவின் ‘F-15E ஸ்ட்ரைக் ஈகிள்’ ரக போர் விமானம் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ‘பிளாக் ஹாக்’ ஹெலிகாப்டர்கள் ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது.
ரேடார் கண்ணில் மண்ணைத் தூவித் தாக்கும் வல்லமை கொண்ட அமெரிக்காவின் வான் ஆதிக்கத்திற்கு, ஈரானின் இந்த அதிரடி பதிலடி மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது. நேரடி ராணுவ பலத்தில் அமெரிக்கா பெரியது என்றாலும், ஈரான் தனது “சமச்சீரற்றபோர்” முறையைப் பயன்படுத்தி வல்லரசையே அதிரச் செய்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ஈரானின் ‘மஜித்’ எனப்படும் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இது ரேடார் தொழில்நுட்பத்தை நம்பியிருக்காமல், விமானத்திலிருந்து வெளிப்படும் வெப்பத்தை வைத்தே இலக்கைத் துல்லியமாகக் கண்டறியும் திறன் கொண்டது. இதனால் ஏவுகணை தன்னைத் தாக்க வருகிறது என்பது விமானிக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது.
8 கி.மீ தூரம் வரை பாய்ந்து தாக்கும் இந்த ஏவுகணைகளால், அமெரிக்காவின் மிகநவீனமான F-35 போர் விமானங்கள் கூடத் தப்பிக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. ஈரானின் இந்த புதிய ராணுவ தந்திரங்கள், வான்வெளியில் அமெரிக்காவுக்கு இருந்த முழுமையான கட்டுப்பாட்டை தற்போது கேள்விக்குறியாக்கியுள்ளன.
