பனாமா கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ‘அமெரிக்காக்களின் பாலம்’ அருகே உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் அந்தப் பகுதியே போர்க்களம் போல காட்சியளிக்கிறது.

பாலோவா பகுதியில் உள்ள எண்ணெய் டேங்கர் முனையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து அணைக்க முயற்சிக்கும் முன்னரே, அங்குள்ள எரிபொருள் டேங்கர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இந்த வெடி விபத்தால் உருவான ராட்சத நெருப்புப் பிழம்புகள் வானுயர எழும்பின.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. எரிபொருள் டேங்கர் வெடித்தபோது, பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது நெருப்பு மழை போல பொழிந்தது. சுதாரித்துக் கொண்ட வாகன ஓட்டிகள், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வாகனங்களை அப்படியே விட்டுவிட்டு அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

இந்த விபத்தில் சிக்கி இதுவரை பலர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தின்போது அங்கிருந்த ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பனாமா கால்வாய் பாலத்தின் வழியாக செல்லும் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. “பாலத்தின் உறுதித்தன்மை குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, பாதுகாப்பு கருதி போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படாது,” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தீயணைப்பு வீரர்களும், பேரிடர் மீட்புப் படையினரும் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வரத் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.