மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் போர் பதற்றம் தணியாத நிலையில், ஈரான் நாட்டை ஒரே இரவில் அழிக்கும் வல்லமை அமெரிக்காவிற்கு இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்க ஆயுதப் படை அதிகாரி ஒருவரை, அமெரிக்கா அதிரடி நடவடிக்கை மூலம் மீட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரானுக்கு எதிராக மிகவும் ஆவேசமான கருத்துகளை முன்வைத்தார். “ஈரானை ஒரே இரவில் எங்களால் தரைமட்டமாக்க முடியும். அந்த இரவு இன்றாகக்கூட இருக்கலாம்” என்று அவர் குறிப்பிட்டது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மிக ரகசியமான ராணுவத் தகவல்கள் ஈரானுக்குக் கசிந்துள்ளதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவின் F-15 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானபோது, அதிலிருந்த இரண்டு வீரர்களில் ஒருவர் மாயமானார். அவரை மீட்கும் ரகசியத் திட்டம் குறித்த தகவல், மீட்புப் பணி தொடங்கும் முன்னரே ஈரான் ராணுவத்திற்குத் தெரிந்திருந்தது.

அமெரிக்க அரசுக்குள் இருந்தே யாரோ ஒரு நபர் இந்தத் தகவலை ஈரானுக்குப் பரிமாறியுள்ளதாக சந்தேகிக்கும் டிரம்ப், அந்த ஒற்றரைக் கண்டுபிடித்து கடும் தண்டனை வழங்கப்படும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சில ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாக டிரம்ப் சாடியுள்ளார். அவர்களுக்கு அந்தத் தகவல் எப்படிக் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியைத்  திறக்க ஈரானுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிந்துவிட்டதாகத் தெரிவித்த டிரம்ப், இனி கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றார். ஈரான் எங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளாவிட்டால், அவர்கள் மிகப்பெரிய விலையைச் செலுத்த வேண்டியிருக்கும். அமெரிக்க ராணுவம் நினைத்தால் செவ்வாய்க்கிழமை கூட தாக்குதலைத் தொடங்கலாம். ஈரானை நிர்மூலமாக்க எங்களிடம் போதுமான வலிமை உள்ளது,” என டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க அதிபரின் இந்த அதிரடிப் பேச்சால்  ஈரானுக்கு மிகவும் இக்கட்டான சூழலாகக் கருதப்படுகிறது.