கரிபியன் பிரீமியர் லீக் (CPL 2026) தொடரில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் தனது மிரட்டலான பேட்டிங்கின் மூலம் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஆன்டிகுவா அண்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்காக விளையாடி வரும் 24 வயதுடைய பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஹசன் நவாஸ், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சர்வதேசப் போட்டிகளில் இருந்து சில காலமாக ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ஹசன் நவாஸ், கடந்த நவம்பர் 2025-க்குப் பிறகு எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு தனது முதல் CPL தொடரில் களமிறங்கியுள்ள அவர், ஆன்டிகுவா அணிக்காக அறிமுகமாகி அதிரடியாக ஆடி வருகிறார்.

தொடரின் 24-வது லீக் போட்டியில் பலம் வாய்ந்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்ட ஆன்டிகுவா அணி, தொடக்கத்தில் திணறியது. ஆனால், பொறுப்புடன் ஆடிய ஹசன் நவாஸ், சிபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைக் கடந்து அசத்தினார். அவர் வெறும் 48 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 ராட்சத சிக்சர்கள் உட்பட 76 ரன்களை விளாசினார். இது அவரது டி 20 கிரிக்கெட் வாழ்க்கையின் 12-வது அரைசதமாகும்.

இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய ஹசன் நவாஸ், அனுபவ வீரரான மொயின் அலியுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இருவரும், எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து வெறும் 61 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்து மிரட்டினர்.

இந்தச் இமாலயச் பார்ட்னர்ஷிப்பில் ஹசன் நவாஸின் பங்கு மட்டும் 69 ரன்களாக இருந்தது. மொயின் அலி 28 ரன்கள் சேர்த்தார். இந்த அதிரடி ஜோடியின் ஆட்டத்தால், ஆன்டிகுவா அண்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்டியது.

தனது முதல் CPL தொடரிலேயே முத்திரை பதித்து வரும் ஹசன் நவாஸ், இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில் 111 பந்துகப்புகளை எதிர்கொண்டு மொத்தமாக 137 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 14 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். பாகிஸ்தான் தேசிய அணியில் தனக்கான இடத்தை மீண்டும் பிடிக்க இந்தத் தொடர் அவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.