மும்பையில் பிசிசிஐ  தலைமை அலுவலகத்தில் மிக முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், இந்திய கிரிக்கெட் அணி குறித்து ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விளையாட்டுப் போட்டிகள் 2026-ல் பங்கேற்கும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு, நாட்டின் முன்னணி கிரிக்கெட் ஜாம்பவானான வி.வி.எஸ். லட்சுமண் தலைமைப் பயிற்றுவிப்பாளராக  நியமிக்கப்படவுள்ளார்.

வி.வி.எஸ். லட்சுமணுக்கு இந்த முக்கிய பொறுப்பு வழங்கப்படுவதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான காரணம் உள்ளது. ஒரே நேரத்தில் இந்திய அணி பல்வேறு தொடர்களில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி களமிறங்கும் அதே காலகட்டத்தில், இந்தியாவில் வைத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரும் நடைபெற உள்ளது. இதனால், அணிகளை நிர்வகிக்க பிசிசிஐ இந்த மாற்று ஏற்பாட்டைச் செய்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியுடன் வி.வி.எஸ். லட்சுமண் தலைமை பயிற்சியாளராக பயணிக்க உள்ளார். அவருடன் இணைந்து பணியாற்ற ரிஷிகேஷ் கானிட்கர் மற்றும் சுபாதீப் கோஷ் ஆகியோர் துணைக் பயிற்சியாளர்களாகவும்  மருஃப் ஃபஜந்தா அணியின் குழுத் தலைவராகவும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 செப்டம்பர் 24-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியை வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி விளையாடுகிறது. குறிப்பாக, தரவரிசையில் முன்னணியில் உள்ள காரணத்தினால் இந்திய அணிக்கு நேரடியாகக் காலிறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனினும், காலிறுதியில் இந்திய அணியை எதிர்கொள்ளப் போகும் எதிரணி யாரு என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

இந்தியாவுக்காகக் களமிறங்கவுள்ள இந்தப் படை மிகவும் பலம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்கு நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாகத் தலைமை தாங்க உள்ளார். அவரைத் தவிர, இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, விக்கெட் கீப்பர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் உள்ளிட்ட பல முன்னணி சூப்பர் ஸ்டார் வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.