சென்னையில் நடந்த ஒரு சிறு வாக்குவாதம், கொலையில் முடிந்த  கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததைத் தட்டிக் கேட்டதற்காக, தம்பிக்குத் பதிலாக அவனது அண்ணனை வழிமறித்து அடித்துக் கொன்ற கொடூர வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் சுனில் (22). கடந்த 30-ஆம் தேதி அன்று, அவர் தனது தோழியான கல்லூரி மாணவியுடன் ரெயில்வே கேட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே நின்றுகொண்டிருந்த ஒரு கும்பல், அந்த மாணவியை ஆபாசமாக கிண்டல் செய்துள்ளது. இதைப் பார்த்துப் பொறுக்க முடியாத சுனில், உடனடியாக அந்த கும்பலைக் கண்டித்துத் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. உடனடியாக அப்பகுதி மக்கள் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஆனால் அந்த கும்பல், அருகிலுள்ள மதுக்கடையில் மது அருந்திவிட்டு போதையில் மீண்டும் அதே பகுதிக்கு வந்துள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால், அந்த வழியாக சுனிலின் அண்ணன் முனீஸ்வரன் (34) தனது வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சுனிலைத் தேடிய அந்த வெறிபிடித்த கும்பல், நள்ளிரவில் தனியாக வந்த முனீஸ்வரனை வழிமறித்து “உன் தம்பி சுனில் எங்கே?” என்று மிரட்டலாகக் கேட்டுள்ளது. அதற்கு முனீஸ்வரன், தனக்கு எதுவும் தெரியாது என்றும், அவன் எங்கே இருக்கிறான் என்று தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

ஆனாலும் ஆத்திரம் அடங்காத அந்த போதைக் கும்பல், முனீஸ்வரனிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டு, தாங்கள் மறைத்து வைத்திருந்த கட்டையால் அவரது தலையிலும் உடலிலும் சரமாரியாகத் தாக்கியது. இந்த திடீர் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் முனீஸ்வரன் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

ரத்த வெள்ளத்தில் மிதந்த முனீஸ்வரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிய அவர், கடந்த முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடக்கத்தில்  போலீசார் இந்தச் சம்பவத்தை அடிதடி வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், முனீஸ்வரன் உயிர் இழந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கு உடனடியாக கொலை வழக்காக மாற்றப்பட்டது. தீவிர தேடுதலுக்குப் பிறகு, லோகேஷ்வரன் (21), ஜான்சன் (19), ஜெயந்தன் (19) மற்றும் ஒரு சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்.