டெல்லியில் உள்ள மையத்தில் நடைபெற்ற முக்கியக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி கலந்துகொண்டார். அப்போது, முந்தைய காலங்களில் எல்லையில் நடத்தப்பட்ட ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ போன்றதொரு நடவடிக்கை மீண்டும் தேவைப்படும் சூழ்நிலை உருவானால் இந்திய ராணுவம் என்ன செய்யும் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த உபேந்திர திவேதி, “இதற்கான பதிலை நான் ஏற்கனவே முன்கூட்டியே அளித்துவிட்டேன்; பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளை உருவாக்கி இந்தியாவிற்கு எதிராகச் செயல்படவைக்கும் என்றால், உலக வரைபடத்தில் மற்றொரு அங்கமாகத் தொடர வேண்டுமா? அல்லது வெறும் வரலாறாக அழிய வேண்டுமா? என்பதை அந்த நாடுதான் தீர்மானிக்க வேண்டும்” என்று அதிரடியாகக் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய ராணுவத் தளபதி, பாகிஸ்தான் தனது எல்லையோரப் பயங்கரவாதப் போக்கை மாற்றிக்கொள்ளத் தவறினால், ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் இன்னும் பல மடங்கு அதிக பலத்துடன் கொடூரமாக மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தார்.
இந்திய அரசு தனது மக்களின் முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும்நலனுக்காக எப்போதும் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்த அவர், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அல்லது இடையூறு விளைவிக்கும் எந்தவொரு சதி முயற்சிக்கும் இந்திய ராணுவத்தின் தரப்பில் இருந்து மிகத் தீவிரமான மற்றும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாகக் கூறினார்.
