2026-27ஆம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான மையங்களில் நடைபெற்றது. சுமார் 22.80 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வின் வினாத்தாள், தேர்வு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே ராஜஸ்தானில் கசிந்தது அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை மே 3 அன்று நடந்த தேர்வை அதிரடியாக ரத்து செய்ததுடன், மறுதேர்வு அடுத்த மாதம் (ஜூன்) 21-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்தது. இந்த வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு ரத்து விவகாரம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களிடையே பெரும்அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், ராஜஸ்தான் மாநிலம் சிகர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் மெஹ்வால் (22) என்ற மாணவர், கடந்த 3 ஆண்டுகளாகத் தனது சகோதரியுடன் சேர்ந்து நீட் தேர்வுக்காகக் கடுமையாகப் படித்து வந்துள்ளார். மே 3-ஆம் தேதி தேர்வை மிகச் சிறப்பாக எழுதியிருந்த அவர், நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்று பெற்றோரிடம் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
ஆனால், தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டதால், மீண்டும் அதேபோல் சிறப்பாக எழுத முடியுமாஎன்கிற கடுமையான மன உளைச்சலுக்கும் விரக்திக்கும் ஆளாகியுள்ளார். இதனால் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரதீப் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தேர்வு ரத்தால் ஏற்பட்ட விரக்தியே தன் மகனின் மரணத்திற்குக் காரணம் எனப் பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்துள்ள நிலையில், போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
