இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் அணுக்கமாகச் செயல்பட ஆரம்பித்துள்ள சூழலில், பாகிஸ்தான் தனது பழைய ஆணவ போக்கை மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், “இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் இணைந்து செயல்பட்டால், பாகிஸ்தான் இருமுக போர் செய்யத் தயாராக உள்ளது. இதற்கான முழுமையான உத்திகள் எங்களிடம் உள்ளன. ஆனால் தற்போது அதைப் பற்றி விவரிக்க இயலாது.
பாகிஸ்தானில் தங்கியுள்ள ஆப்கான் அகதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் சட்டவிரோத குடியிருப்பாளர்கள் என அடையாளம் காணப்பட்டு, விரைவில் நாட்டை விட்டு வெளியேற்றப்படும்” எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தொடர்ச்சியான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இருநாடுகளும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்ட நிலையில், பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் தரப்பில், இந்த தாக்குதல்கள் நடைபெற்றபோது ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் டெல்லியில் இருந்ததை முன்வைத்து, இந்தியாவின் தூண்டுதலால் தான் இந்த தாக்குதல் நடந்ததென்று வழக்கம்போல் யாதொரு ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. இந்தியா சார்பாகவே ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக பாக் அமைச்சர் குழப்பமான பேச்சுக்களை கூறியுள்ளார்.
இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு துணைநின்று, அவர்களை ஊக்குவிப்பது வெளிப்படையான உண்மை. உள்நாட்டில் வளர்ச்சித் தோல்விகள் ஏற்படும்போது, அக்கூறுகளை மறைக்கவே பாகிஸ்தான் பிற நாடுகளை குற்றம் சுமத்துகிறது.
ஆப்கானிஸ்தான் தனது பிரதேசத்தில் இறையாண்மை நிலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்பது உண்மை. இந்த நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது” எனக் கூறி, பாக் அமைச்சரின் உரையை முற்றாகத் தட்டி நிராகரித்துள்ளது
