பாகிஸ்தானின் 40 சதவீத நிலப்பரப்பைக் கொண்ட பலுசிஸ்தான் மாகாணத்தை கட்டுப்படுத்த முடியாமல் ராணுவம் திணறி வருவதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் 12 இடங்களில் நடந்த ஒருங்கிணைந்த தாக்குதல்களில் பாதுகாப்புப் படையினர் 177 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற போதிலும், அந்தப் பகுதி மிகப்பெரியது என்பதால் அமைதியை நிலைநாட்டுவது சவாலாக இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். “ஒரு பெரிய நகரத்தை பாதுகாப்பது போல பலுசிஸ்தானை அவ்வளவு எளிதாகக் காக்க முடியாது” என அவர் தேசிய சட்டமன்றத்தில் புலம்பியிருப்பது, அங்கு நிலவும் மோசமான பாதுகாப்பு சூழலை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் மற்றொரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அங்குள்ள தீவிரவாதிகள் கையில் வைத்திருக்கும் ஆயுதங்களின் மதிப்புதான்! ஒரு துப்பாக்கியின் விலையே 20 லட்சம் ரூபாய் என்றும், அதில் ஆயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள அதிநவீன ‘தெர்மல் சைட்’ கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இவ்வளவு கோடிக்கணக்கான பணம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். மேலும், இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் தான் இந்த வன்முறைக்கு பின்னால் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், 60 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார திட்டங்களும் இந்த தொடர் தாக்குதல்களால் பெரும் முடக்கத்தை சந்தித்துள்ளன.
