பெர்த் நகரைச் சேர்ந்த ஆஸ்டின் என்ற சிறுவன், நடுக்கடலில் தத்தளித்த தன் தாய் மற்றும் உடன்பிறப்புகளைக் காப்பாற்ற 4 மணிநேரம் அலைகளோடு போராடி நீந்திய சம்பவம் ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவையுமே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜனவரி 30 அன்று விடுமுறைக்காகக் கடற்கரைக்குச் சென்றபோது, பலத்த காற்றால் இவர்களது படகு கரைக்குத் திரும்ப முடியாமல் சுமார் 14 கிலோமீட்டர் தூரம் நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.
குடும்பமே ஆபத்தில் இருப்பதை உணர்ந்த ஆஸ்டின், துணிச்சலாகக் கடலில் குதித்து கரைக்கு நீந்தத் தொடங்கினான். முதல் இரண்டு மணிநேரம் உயிர் காக்கும் கவசம் அணிந்து நீந்தியவன், அது தனது வேகத்தைக் குறைப்பதாகக் கருதி அதைக் கழற்றி எறிந்துவிட்டு, அடுத்த இரண்டு மணிநேரம் உயிரைப் பணயம் வைத்து வெறும் கைகளால் நீந்தி கரை சேர்ந்திருக்கிறான்.
கரைக்கு வந்ததும் களைப்பில் சுருண்டு விழாமல், அங்கிருந்து மேலும் 2 கிலோமீட்டர் ஓடிச் சென்று உதவி கோரியிருக்கிறான். அவனது துல்லியமான தகவலால், இருட்டில் தத்தளித்துக் கொண்டிருந்த அவனது தாய் ஜோன் மற்றும் தம்பி, தங்கையை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். நள்ளிரவில் நடந்த இந்த மீட்புப் பணியில் ஹெலிகாப்டர்களும் படகுகளும் பயன்படுத்தப்பட்டன. “இது மனித சக்தியை மீறிய செயல்” என மீட்புக் குழுவினர் ஆஸ்டினைப் பாராட்டித் தள்ளுகிறார்கள். தன் குடும்பத்தைக் காக்க ஒரு சிறுவன் காட்டிய இந்த அசாத்திய துணிச்சல், இப்போது சமூக வலைதளங்களில் உலகையே உருக வைத்துக் கொண்டிருக்கிறது.
