பாகிஸ்தான் அணியின் சக்திவாய்ந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளங்கிய ஆசிஃப் அலி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தனது டி20 அறிமுகத்தை செய்த ஆசிஃப், பின்னர் ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தானுக்காக விளையாடினார். கடந்த 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனது கடைசி சர்வதேச போட்டியில் ஆடிய அவர், தற்போது ஓய்வெடுத்துள்ளார்.

58 டி20 போட்டிகளில் பங்கேற்று 577 ரன்கள் பெற்றுள்ள அவர், தனது சிறந்த ஸ்கோர் 41 (நாட் அவுட்) மூலம் கடந்த  2018ல் ஜிம்பாப்வேக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

21 ஒருநாள் போட்டிகளில் 382 ரன்கள், கடைசி ஒருநாள் போட்டி – 2022ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியுள்ளார். 2021 டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 7 பந்துகளில் 25 ரன்கள் விளாசி பாகிஸ்தானுக்கு வெற்றியளித்தார்.

தனது ஓய்வு பற்றி சமூக ஊடகத்தில் அவரது பதிவில் கூறியதாவது:

“பாகிஸ்தான் ஜெர்சி அணிந்து விளையாடியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய மரியாதை. உலகக் கோப்பையின் போது என் அன்பு மகளை இழந்த வேளையிலும் என்னை தாங்கிய என் குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. பெருமையுடன் ஓய்வு பெறுகிறேன். இனிமேல் உள்நாட்டு மற்றும் லீக் கிரிக்கெட்டில் மட்டுமே பங்கேற்பேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் 2025 ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் ஆசிஃப் அலிக்கு இடமில்லை. அவரது பெயர் தேர்வு குழுவில் கூட விவாதிக்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலை அவரை மனமுடைந்த நிலையில் ஓய்வுக்கு தூண்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய வட்டாரங்கள், பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட முக்கிய வீரர்களையும் அணியில் புறக்கணித்துள்ளதாக தெரிவித்தன.

2025 ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:

கேப்டன்: சல்மான் அலி ஆகா
வீரர்கள்: அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், சாஹிப்சாதா அப்ரிடி, சுஃப்யான் முகிம் உள்ளிட்டோர்.