சமீபத்தில் நிறைவடைந்த இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு, இந்திய அணியில் விளையாடும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் அவர் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக அவர் எதற்காகக் காத்திருந்தாரோ, அந்த வாழ்நாளின் மிக முக்கிய தருணம் தற்போது நனவாகியுள்ளது. வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய அணியின் அதிகாரப்பூர்வ நீல நிற ‘ஜெர்சி’ வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் த்ரோ-டவுன் ஸ்பெஷலிஸ்ட் ரகு, வைபவ்வின் ஹோட்டல் அறைக்குச் சென்று இந்த ஜெர்சியை அவரிடம் ஒப்படைத்தார். அப்போது அவரது அறையின் கதவில் ‘பிளேயர் நம்பர் 532’ (Player Number 532) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கதவைத் திறந்த வைபவ், நெகிழ்ச்சியோடு ரகுவின் காலில் விழுந்து ஆசி பெற்றார். தனது கனவு ஜெர்சியைக் கண்டதும் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கிய வைபவ், “இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எந்த ஒரு கனவோடு முதல்முதலில் கையில் பேட் பிடித்து மைதானத்திற்குள் நுழைந்தேனோ, அந்த வாழ்நாள் கனவு இன்று நனவாகியுள்ளது” என்று பிசிசிஐ பகிர்ந்துள்ள வீடியோவில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

சமீபத்திய ஐபிஎல் தொடரில் கொடி கட்டிப் பறந்த வைபவ் சூர்யவன்ஷி, ஒட்டுமொத்த சீசனிலும் அதிகபட்சமாக 776 ரன்களைக் குவித்து ‘ஆரஞ்சு தொப்பியை’ (Orange Cap) வென்று அசத்தியிருந்தார். குறிப்பாக, அந்த ஒரே சீசனில் மட்டும் அவர் 72 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, டி20 உலக ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் வசம் இருந்த ஒரு சீசனில் 59 சிக்ஸர்கள் என்ற சாதனையைத் தவிடுபொடியாக்கிப் புதிய உலக சாதனை படைத்தார். ஐபிஎல் அரங்கில் அசாத்திய சாதனை படைத்த இந்த 15 வயது இளம் புயல், தற்போது இந்திய அணியின் நீல நிற ஜெர்சியை அணிந்து சர்வதேச கிரிக்கெட்டிலும் உலக சாதனைப் புத்தகங்களைத் திருத்தி எழுதத் தயாராகிவிட்டார்.