பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றின்போது நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து, இருவர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் கார் தெஹ்சிலில் உள்ள கவுசர் கிரிக்கெட் மைதானத்தில் நிகழ்ந்தது. இதில் ஒரு மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் (IED) பயன்படுத்தப்பட்டதாக பஜௌர் மாவட்ட காவல்துறை அதிகாரி வகாஸ் ரஃபீக் உறுதிப்படுத்தினார்.

இந்த வெடிகுண்டு தாக்குதலில், ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் மற்றும் நஜீப் கான் என்ற நபர்  காயமடைந்தனர். மேலும், வெடிக்குண்டு தாக்குதல் நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனம் முற்றிலும் சேதமடைந்தது. காயமடைந்தவர்கள் உடனடியாக மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, மாவட்ட காவல்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி இஸ்ரார் கான் தெரிவித்தார்.

இதே நேரத்தில், பயங்கரவாதிகள் போலீஸ் நிலையத்தின் மீது குவாட்காப்டர் மூலம் வேறு ஒரு தாக்குதலை முயற்சி செய்துள்ளனர், எனினும் அது இலக்கைத் தவறவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த, செவ்வாய்க்கிழமை (செப். 2) வடமேற்கு பாகிஸ்தானின் பன்னு நகரில், ஒரு துணை ராணுவத் தளத்தில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஆறு பாதுகாப்புப் படையினர் மற்றும் ஆறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில், ஒரு தற்கொலை குண்டுதாரி, வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை பாதுகாப்பு வளாகத்தின் சுவர் மீது மோதச் செய்தார். இதன் பின்னர், மற்ற தீவிரவாதிகள் வளாகத்திற்குள் நுழைந்து, சுமார் 12 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

 

“இந்தச் சண்டையில் 16 பாதுகாப்புப் படையினரும், மூன்று பொதுமக்களும் காயமடைந்தனர். எங்கள் படைகள் துணிச்சலுடன் எதிர்கொண்டு தாக்குதலை தடுத்து நிறுத்தின,” என பிராந்திய காவல்துறைத் தலைவர் சஜ்ஜாத் கான் தெரிவித்தார்.

இந்நிலையில், கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இத்தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இதுவரை தற்கொண்டு பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால், இஸ்லாமிய போராளிகள் இந்த தாக்குதலுக்குப் பின்னாலிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இந்தக் தாக்குதல்களுக்கு பின்புலமாக, பாகிஸ்தானில் கடந்த பல ஆண்டுகளாக அரசுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் “தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP)” அமைப்பின் பெயர் முன்வைக்கப்படுகிறது. இந்த அமைப்பு, 2007ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அரசை கவிழ்த்து, கடுமையான இஸ்லாமிய சட்டங்களை கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. TTP, ஆப்கானிஸ்தானுடன் சேர்ந்த சட்டவிரோத எல்லைப் பகுதிகளில் செயல்படும் ஒரு தீவிரவாத  அமைப்பாகக் கருதப்படுகிறது.

மேலும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இத்தகைய தாக்குதல்கள், பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு குறைபாட்டை வலியுறுத்துகின்றன. இதை தடுக்க, பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வு அமைப்புகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.