பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தில், காதல் திருமணம் செய்த தம்பதியரை ‘கௌரவக் கொலை’ என அழைக்கப்படும் கொடூர வழக்கத்தின் பேரில் பொதுமக்கள் முன்பே சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்து உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, அதைப் பார்த்த அனைவரையும் மனதை உலுக்கும் வகையில் பாதித்துள்ளது. சம்பவம் தொடர்பாக ஒருவர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என மாநில முதலமைச்சர் சர்ப்ராஸ் புக்டி உறுதி செய்துள்ளார்.

இந்த கொடூரமான சம்பவம், பாகிஸ்தானில் உள்ள உள்ளூர் பழங்குடி மன்றத்தினரின் உத்தரவின் பேரில் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது. வீடியோவில், ஒரு பெண்ணுக்கு குர்ஆன் நூல் வழங்கப்படுவதைத் தொடர்ந்து, “நீ என்னுடன் ஏழு அடிகள் நடக்கலாம். அதற்குப் பிறகு என்னை சுடலாம்” என்று அந்த பெண் கூறுகின்றார். பின்னர், அந்த நபர் மூன்று துப்பாக்கிச் சூட்டுகள் செலுத்த, பெண் தரையில் விழுகிறார். அருகிலேயே ஒருவர் ரத்தத வெள்ளத்தில் இறந்த நிலையில் காணப்படுகிறார். பின்னர் இருவரின் உடலிலும் மீண்டும் குண்டுகள் பாய்ந்தன.

மனித உரிமை ஆணையத்தின் தரவின்படி, பாகிஸ்தானில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 1,000 பெண்கள் ‘கௌரவக் கொலை’க்குள்ளாகின்றனர். பெரும்பாலும் இது தந்தை, சகோதரன், மகன் போன்ற குடும்ப உறுப்பினர்களால் தான் செய்யப்படுகிறது. கடந்த 2016ல் பாகிஸ்தான் இந்த சட்டத்தில் ஓரளவு மாற்றங்களை கொண்டு வந்திருந்தாலும், ‘மன்னிப்பு’ சட்டக் கிளாஸின் காரணமாக குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்கின்றனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜா ஆஸிஃப், “நாட்டை எதிர்த்து ஆயுதம் தூக்கும் முன், இத்தகைய அடக்குமுறை முறைகளை எதிர்த்து மக்கள் குரல் எழுப்ப வேண்டும்” எனக் கூறியுள்ளார்.