அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசிக்கும் நபர் ஒருவருக்கு, அவரது பழைய பேன்ட் பாக்கெட்டிலிருந்து கிடைத்த ஒரு லாட்டரி டிக்கெட் மூலம் ஒரே இரவில் 57 கோடி ரூபாய் ($5.9 Million) பம்பர் ஜாக்பாட் அடித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் பெட்ரோல் பங்க் ஒன்றில் வாங்கிய இந்த டிக்கெட்டை, அவர் பேன்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டு முற்றிலும் மறந்துள்ளார். இதற்கிடையில், பல கோடிக்கான ஜாக்பாட் பரிசு இன்னும் யாராலும் கிளைம் செய்யப்படவில்லை என்றும், அதற்கான கால அவகாசம் முடியப்போகிறது என்றும் லாட்டரி துறை அறிவித்ததைக் கேட்டு, அதிர்ச்சியடைந்த அந்த நபர் தனது வீடு முழுக்கத் தேடத் தொடங்கியுள்ளார்.
அலமாரி, பழைய பைகள் என எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், பல மாதங்களாகப் பயன்படுத்தாத ஒரு பழைய பேன்ட்டின் பாக்கெட்டைத் தடவிப் பார்த்தபோது, கசங்கிய நிலையில் அந்த லாட்டரி டிக்கெட் சிக்கியுள்ளது. டிக்கெட்டின் எண்களைச் சரிபார்த்தபோது, தனக்குத்தான் 57 கோடி பம்பர் பரிசு விழுந்திருக்கிறது என்பதை உணர்ந்து அவர் உறைந்துபோனார்.
அந்த லாட்டரியின் வேலிடிட்டி முடிவடைய இன்னும் வெறும் 8 நாட்களே இருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாகத் தனது கோடிக்கணக்கான பரிசை அவர் கிளைம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, “மக்கள் தங்களது பழைய லாட்டரி டிக்கெட்டுகளைச் தூக்கிப் போடாமல் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்” என லாட்டரி அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
