மேற்கு வங்க மாநிலம் பருப்பூரில் 11 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோழிக்கு பிறந்தநாள் பரிசு வாங்கச் சென்ற சிறுமி காணாமல் போன நிலையில், மறுநாள் அந்தப் பகுதியில் உள்ள குளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த வழக்கில் பிரபாஸ் மண்டல் மற்றும் ஆனந்த் சர்தார் உள்ளிட்ட பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூரமான குற்றத்தைச் செய்தவர்களைக் கைது செய்யக்கோரி மக்கள் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் ஆதாரமாகச் சிக்கியுள்ள நிலையில், சிறப்புப் புலனாய்வுக் குழு மற்றும் சிறப்பு அதிரடிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு நீதி கோரி, முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மெழுகுவர்த்தி ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன.
அதேசமயம், குற்றவாளி எனச் சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. நிலைமையைச் சீர்செய்ய அப்பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ள தற்போதைய முதல்வர் சுவேந்து அதிகாரி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
